தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்


தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 11 July 2023 1:00 AM IST (Updated: 11 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, தேங்காய்களை உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

தேங்காய் உடைத்து போராட்டம்

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர்அலுவலகம் முன்பு கொப்பரை தேங்காய் கொள்முதல் அளவு மற்றும் விலையை உயர்த்தக்கோரி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பிச்சைமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட பொருளாளர் கருணாகரன், துணை தலைவர்கள் பழனிவேல், ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், தென்னை விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் தேங்காய்களை சாலையில் உடைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

கொப்பரை கொள்முதல்

அப்போது கொப்பரை தேங்காய் கொள்முதல் அளவை ஒரு ஏக்கருக்கு 900 கிலோவாக உயர்த்த வேண்டும். மேலும் ஒரு கிலோ கொப்பரை தேங்காயை ரூ.140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். கேரளாவை போன்று தேங்காய்களை கிலோ ரூ.50-க்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். இதேபோல் ரேஷன்கடைகளில் தேங்காய்களை வினியோகிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய்க்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் தென்னை சார்ந்த தொழில் வளர்ச்சியை உருவாக்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு முழுமையான மானியத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகளின் தேங்காய்களை உடைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் உடைத்த தேங்காய்களை, பொதுமக்கள் எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story