கரும்பை கொள்முதல் செய்யக்கோரிவிவசாயிகள் சாலைமறியல் போராட்டம்விழுப்புரம் அருகே பரபரப்பு


கரும்பை கொள்முதல் செய்யக்கோரிவிவசாயிகள் சாலைமறியல் போராட்டம்விழுப்புரம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே கரும்பை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்


பொங்கல் பரிசு

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. இதற்காக வீடு, வீடாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 1,254 ரேஷன் கடைகள் மூலம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 906 பேருக்கும், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களை சேர்ந்த 434 பேருக்கும் ஆக மொத்தம் 6 லட்சத்து 15 ஆயிரத்து 340 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (திங்கட்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளது.

கரும்பு கொள்முதல்

இதையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்குவதற்காக அவற்றை கொள்முதல் செய்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்காக வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான 13 கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின் தரம் சரியாக இருக்கிறதா? 6 அடி உயரம் இருக்கிறதா? ஆகியவற்றை சரிபார்த்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலை மறியல்

அந்த வகையில் நேற்று விழுப்புரம் அருகே பிடாகம், குச்சிப்பாளையம், மரகதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் அறுவடை செய்த கரும்புகளை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி சரிபார்த்து கொள்முதல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது குச்சிப்பாளையம் கிராம விவசாயிகள் தங்களது பகுதிக்குட்பட்ட அரசியல் செல்வாக்கு மிக்க விவசாயிகளிடம் மட்டுமே அதிக கரும்புகளை கொள்முதல் செய்வதாக குற்றம் சாட்டியும், பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளிடமும் கரும்பை கொள்முதல் செய்ய வலியுறுத்தி திடீரென மரகதபுரம்- குச்சிப்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் யசோதா மற்றும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள் கூறுகையில், நாங்கள் 6 அடி நீளம் கொண்ட கரும்புகளை வெட்டி விற்பனைக்காக வைத்துள்ளோம். ஆனால் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய விவசாயிகள் சிலரிடம் இருந்து அதிக கரும்புகளை கொள்முதல் செய்கின்றனர். எனவே அதிகாரிகள் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளிடம் கரும்புகளை கொள்முதல் செய்யவேண்டும் என முறையிட்டனர்.

இதைகேட்ட கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் யசோதா அனைத்து விவசாயிகளிடமும் தலா 20 கரும்புகள் கொண்ட 85 கட்டுகள் கொள்முதல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை ஏற்ற விவசாயிகள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story