உடைந்த எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை சீரமைக்கக்கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்


உடைந்த எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை சீரமைக்கக்கோரி    விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
x

உடைந்த எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை சீரமைக்கக்கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

அணைக்கட்டு சேதம்

விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் வலதுபுறம் உள்ள 4 மதகுகளும் உடைந்தது. இதனால் அணைக்கட்டு உடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் அதனை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், இந்த அணைக்கட்டிற்கு வந்து வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் உடைந்த அணைக்கட்டினால் தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் வீணாக கடலில் சென்று கலக்கிறது.

விவசாயிகள் சாலை மறியல்

இந்நிலையில் உடைந்த அணைக்கட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும், அணைக்கட்டை விரைந்து சீரமைக்க வலியுறுத்தியும் நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கலிவரதன் தலைமையில் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அணைக்கட்டை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இப்போராட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஞானசேகரன், நாகராஜ், பழனி, குமார், முருகன், சூரியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த மறியலால் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

20 பேர் கைது

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ஆனந்தன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிடாததால் அப்போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விரைந்து சீரமைக்க கோரிக்கை

சாத்தனூர் அணை நிரம்பி உபரிநீர் தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கடந்த ஆண்டு உடைந்த நிலையில் இதுநாள் வரையிலும் சீரமைக்கப்படாததால் தண்ணீர் முழுவதும் கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த அணைக்கட்டில் இடதுபுற வாய்க்கால்களான ஆழாங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் ஆகிய வாய்க்கால்கள் வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வேண்டும். ஆனால் கண்டம்பாக்கம் வாய்க்காலுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. வலதுபுற வாய்க்கால்களான ரெட்டி வாய்க்கால், எரளூரான் வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால், இடதுபுற வாய்க்கால் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் வராததால் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்களும், வலதுபுற வாய்க்காலில் 2,500 ஏக்கர் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே உடனடியாக போர்க்கால அடிப்படையில் அணைக்கட்டை சீரமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர்.


Next Story