கழுத்தில் தூக்குகயிறு மாட்டி விவசாயிகள் நூதன போராட்டம்
திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு கழுத்தில் தூக்குகயிறு மாட்டி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கபிஸ்தலம்;
திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு கழுத்தில் தூக்குகயிறு மாட்டி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்க்கரை ஆலை
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆருரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 3 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பகுதியாக இன்று கரும்பு விவசாயிகள் தங்கள் கழுத்தில் தூக்குகயிறு மாட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கி கடன்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாயிகளின் பெயரில் சுமார் ரூ.300 கோடி வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீர்த்து விவசாயிகளை பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும்.விவசாயிகளின் கரும்புக்கான பணம் பிடித்தம் செய்யப்பட்டு, வங்கிகளுக்கு அனுப்பப்படாமல் உள்ள பயிர்க்கடன் தொகை முழுவதையும் வங்கியில் செலுத்த வேண்டும், மத்திய - மாநில அரசுகள் அறிவித்த கரும்பு மற்றும் லாபத்துக்கான முழுத்தொகை மற்றும் வெட்டுக்கூலி, வாகன வாடகை முழுவதையும் வட்டியுடன் ஒரே தவணையில் வழங்க வேண்டும், சர்க்கரை ஆலை தொடர்பான பேச்சு வார்த்தையை, விவசாயிகள் முன்னிலையில் வெளிப்படையாக நடத்த வேண்டும், தி.மு.க. அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, மூடப்பட்ட சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
ஆதரவு
இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் நாக முருகேசன், மாநில செயலாளர்கள் தங்க. காசிநாதன், ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்து கண்டனம் முழக்கமிட்டனர். தொடர்ந்து நாளை 4-வது நாளாக இன்று சர்க்கரை ஆலைக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.