பெங்களூரு சென்ற பஸ்கள் முன் விவசாயிகள் மறியல் போராட்டம்
பெங்களூரு சென்ற பஸ்கள் முன் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 58-வது நாளான நேற்று விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் வெளியே வர மறுத்ததால், போலீசார் அவர்களை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று பந்த் நடைபெற்றது. இதனை கண்டித்தும் நேற்று இரவு 8.30 மணிக்கு மத்திய பஸ் நிலையத்தில் திருச்சியில் இருந்து பெங்களூரு செல்லும் கர்நாடக பஸ்கள் முன்பு அமர்ந்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கண்டோன்மெண்ட் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் கலைந்து சென்றனர். போராட்டத்தால் பெங்களூருக்கு செல்லும் பஸ்கள் 20 நிமிடம் தாமதமாக சென்றது.