கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் எதையும் ஏற்காமல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள நாகுடி பஸ் நிலையம் அருகே விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கல்லணை கால்வாய் பாசனத்தாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க மாவட்ட தலைவர் கொக்குமடை ரமேஷ் தலைமை தாங்கினார்.
கருகும் நெற்பயிர்கள்
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் கலந்து கொண்டு மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகி வருவதால் காவிரி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் அறந்தாங்கி அம்மா உணவகம் எதிரே அறந்தாங்கி மண்டல புகைப்பட கலைஞர்கள் மற்றும் வீடியோ கிராபர்கள் நலச்சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.