விவசாயிகள் நூதன போராட்டம்
மாண்டஸ் புயல் பாதிப்பை கணக்கெடுக்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாண்டஸ் புயல் பாதிப்பை வேளாண்மை துறையினர் கணக்கெடுக்க வலியுறுத்தி இன்று காலை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். அப்போது விவசாயிகள் கையில் தூக்கு கயிறு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதற்கான விண்ணப்ப படிவத்துடன் வந்திருந்தனர்.
பின்னர் அவர்கள் மாண்டஸ் புயல் பாதிப்பை வேளாண்மை துறையினர் கணக்கெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு பெற்று தர வேண்டும், விவசாயிகளை கடனாளியாக்கி தற்கொலைக்கு தள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் வாக்கடை புருசோத்தமன் கூறுகையில், மாண்டஸ் புயல் காரணமாக சம்பா நெல் அறுவடை, வாழை மகசூல் பாதிப்பு அடைந்துள்ளது.
எனவே புயல் பாதிப்புகளை வேளாண்மை துறையினர் கணக்கெடுக்க வேண்டும். லாபகரமான விலை கொள்முதல் செய்யாததாலும், வெள்ளம், வறட்சி பாதிப்பு நிவாரணம், பயிர் காப்பீடு, இழப்பீடு வழங்காததாலும் விவசாயிகள் கடனாளியாகி தற்கொலைக்கு செல்கின்றனர்.
மேலும் தமிழக அரசு பயிர் மற்றும் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தவணை தவறும் முன்னர் புதுப்பிக்க கடன்தாரருக்கு தெரியப்படுத்தாமல் அசல் கடனுடன் வட்டி, அபராத வட்டி இணைத்து மேலும், மேலும் கடன் சுமை ஏற்றுகின்ற நடவடிக்கையால் தற்கொலைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது என்றார்.
இதில் நார்த்தாம்பூண்டி சிவா, துரிஞ்சாபுரம் அய்யாயிரம், பாலானந்தல் பிரபு, சொரகுளத்தூர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.