தர்மபுரி உழவர் சந்தைகளில் நூக்கோல் விலை குறைவு கிலோ ரூ.78-க்கு விற்பனை


தர்மபுரி உழவர் சந்தைகளில் நூக்கோல் விலை குறைவு கிலோ ரூ.78-க்கு விற்பனை
x
தினத்தந்தி 5 July 2023 1:00 AM IST (Updated: 5 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

நூக்கோல் வரத்து அதிகரிப்பால் தர்மபுரி உழவர் சந்தைகளில் நூக்கோல் விலை குறைந்துள்ளது. நேற்று 1 கிலோ ரூ.78- க்கு விற்பனையானது.

விளைச்சல் குறைந்தது

தமிழ்நாட்டில் காய்கறிகள் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றில் இருந்து பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த சில வாரங்களாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் காய்கறி வகைகளில் ஒன்றான நூக்கோல் நீலகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி, ஓசூர், தளி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையில் விளையும் நூக்கோலின் விளைச்சல் கோடை வெயில் தாக்கத்தால் கடந்த சில வாரங்களில் இயல்பு நிலையை விட குறைந்தது. இதனால் சந்தைகளுக்கு நூக்கோல் வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரித்தது.

கிலோவிற்கு ரூ.10 வரை குறைந்தது

கடந்த வாரம் உழவர் சந்தைகளில் 1 கிலோ நூக்கோல் ரூ.86-க்கும், வெளிமார்க்கெட்டுகளில் ரூ.100-வரையும் விற்பனையானது. இந்த சந்தைகளுக்கு கடந்த சில நாட்களாக நூக்கோல் வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் அதன் விலை சற்று குறைய தொடங்கியுள்ளது.

கடந்த வாரத்தை ஒப்பிடும்போது 1 கிலோவிற்கு ரூ.10 வரை விலை குறைந்துள்ளது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ நூக்கோல் ரூ.78- க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.85 வரை விற்பனையானது. பல்வேறு காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் நூக்கோல் விலை சற்று குறைந்திருப்பதால் அதை வாங்கி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


Next Story