திருச்சியில் விவசாயிகள், தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட்டம்-கடைகள் அடைப்பு


தினத்தந்தி 12 Oct 2023 1:16 AM IST (Updated: 12 Oct 2023 1:33 AM IST)
t-max-icont-min-icon

காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசை கண்டித்து திருச்சியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் 584 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

முழு அடைப்பு

காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்துக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து விவசாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

கடைகள் அடைப்பு

அதன்படி, காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர். திருச்சி மாநகரில் 30 ஆயிரம் கடைகள், புறநகரில் சுமார் 10 ஆயிரம் கடைகள் என்று 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்தநிலையில், காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருச்சி மலைக்கோட்டை பகுதியில் என்.எஸ்.பி. சாலையில் பெரிய வர்த்தக நிறுவனங்கள் சில அடைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் தெப்பக்குளம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தரைக்கடைகள், பர்மா பஜாரில் 10-க்கும் மேற்பட்ட கடைகள், மத்திய பஸ் நிலையத்துக்குள் உள்ள 20 கடைகள் உள்பட அந்த பகுதியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் தா.பேட்டை பகுதியில் மளிகை கடைகள், ஜவுளி, பெட்டிக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ்கள் வழக்கம்போல் சென்று வந்தன.

வழக்கம்போல் இயங்கின

காந்தி மார்க்கெட்டில் வழக்கம்போல் காய்கறி, மளிகை கடைகள், பூக்கடைகள் திறந்து இருந்தன. இதேபோல், பெரியகடைவீதி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் உள்ள கடைகளும், திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள பா்மா பஜார் கடைகளும், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், பொன்மலை, கே.கே.நகர், எடமலைப்பட்டிபுதூர், கருமண்டபம், உறையூர், தில்லைநகர், தென்னூர், கண்டோன்மெண்ட் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன.

மேலும் அரசு, தனியார் பஸ்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள், வாடகை கார், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின. பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டதால் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கடையடைப்பு போராட்டத்தின்போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

300 பேர் கைது

இந்தநிலையில் காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசை கண்டித்து காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் தி.மு.க. திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன் உள்ளிட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்து தனியார் பள்ளியில் உள்ள கூட்டரங்கில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story