விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும்
விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும்
குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்யவேண்டும் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குறுவை சாகுபடி
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் 61 ஆயிரத்து 588 எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.75.95 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டத்தினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் ஒரு ஏக்கருக்கு யூரியா 45 கிலோ, டி.ஏ.பி. 50 கிலோ மற்றும் பொட்டாஷ் 25 கிலோ, ஒரு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரத்து 466 மதிப்பில் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
50 சதவீத மானியத்தில் விதைகள்
இந்த திட்டத்தின் கீழ் விவசாயிக்கு ஒரு எக்டேருக்கு மட்டுமே இலவசமாக உரங்களை பெற இயலும். குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள் 50 சதவீத மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் வழங்கப்பட உள்ளது. மேலும், காவேரி டெல்டா மாவட்டத்தில் மண் வளத்தை பெருக்கவும், மகசூலை அதிகரித்திடவும் 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உரவிதைகள் வழங்கப்பட உள்ளது.
குறுவை பருவத்தில், பயிர் பல்வகைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் நெல் அல்லாமல் மாற்றுப்பயிர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வகை சாகுபடி பயிர் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
விவசாய இடுபொருட்கள்
சிறு தானியத்தொகுப்பில் ஏக்கர் ஒன்றுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.2 ஆயிரத்து 234 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன. பயறு வகை தொகுப்பில் ஏக்கர் ஒன்றுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.3 ஆயிரத்து 716 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.
எண்ணெய் வித்துக்கள் தொகுப்பில் ஏக்கர் ஒன்றுக்கு 50 சதவீத மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 80 கிலோ விதை ரூ.10 ஆயிரத்து 840 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன. குறுவை பருவத்தில் குறுவை நெல் சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் பல் வகைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
உழவர் செயலியில் பதிவு செய்ய வேண்டும்
வேளாண்மை பொறியியல் துறை மூலம் சிறு, குறு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் மானியத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியம் மாநில நிதியில் இருந்து வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்திலும், களை எடுக்கும் கருவி, பவர் டில்லர் கருவிகள் வழங்கப்பட உள்ளன. மேற்கண்ட திட்டங்களில் பயன் பெற விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.