தென்னைக்கு இடையே ஊடுபயிராக விவசாயிகள் கடலை சாகுபடி
ஏனாதி ஊராட்சியில் தென்னை சாகுபடிக்கு இடையே ஊடுபயிராக விவசாயிகள் கடலை சாகுபடி செய்து வருகிறாா்கள்.
கரம்பயம்:
ஏனாதி ஊராட்சியில் தென்னை சாகுபடிக்கு இடையே ஊடுபயிராக விவசாயிகள் கடலை சாகுபடி செய்து வருகிறாா்கள்.
கடலை சாகுபடி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏனாதி ஊராட்சியில் தென்னை சாகுபடிக்கு நடுவே ஊடுபயிராக விவசாயிகள் கடலை சாகுபடி செய்துள்ளனர். 100 நாட்கள் முறையாக அந்த கடலையை நல்லபடியாக வளர்த்து வந்தால்
சுமார் ரூ. 2 லட்சத்துக்கு கூடுதலாக லாபம் பெறலாம் என விவசாயிகள் கூறுகிறார்கள். இது குறித்து விவசாயி ராமசாமி கூறியதாவது:-
நான் தென்னை சாகுபடி செய்யும் தென்னந்தோப்பில் ஊடுபயிராக கடலை போட்டுள்ளேன். சுமார் 7 ஏக்கர் நிலத்தில் கடலை சாகுபடி செய்துள்ளேன். இந்த சாகுபடியில் முதலாவதாக ரூ.50 ஆயிரத்துக்கு விதை கடலை வாங்கி அதை பக்குவப்படுத்தி ஆட்களை வைத்து விதைத்து ரூ.40 ஆயிரம் செலவில் 15 வது நாள் கலைக்கொல்லி அடித்து 20-வது நாள் மண் அணைக்க வேண்டும்.
100 நாட்கள்
பின்னர் ரூ.20 ஆயிரம் செலவில் பூச்சிகள் கடலையை தாக்காதவாறு மருந்து அடித்து, கடலை வளர்வதற்கு உரம் தெளித்து, தண்ணீர் பாய்ச்சி சுமார் 90 நாட்கள் கடலையை பக்குவமாக வளர்த்து கடலையை பறித்து செடி வேறாக கடலை வேறாக பரிக்க வேண்டும். பின்னர் அந்த கடலையை ஆலைக்கு கொண்டு சென்று கடலை பருப்பை தனியாக பிரித்து நாங்கள் எடைக்கு விற்கும் போது சுமார் 100 நாட்களை கடந்து விடுகிறது.
ரூ.5 லட்சம்
கடலைக்காக ரூ.2 லட்சம் வரை செலவு செய்தாலும் சுமார் 100 நாட்கள் நாங்கள் ஒரு குழந்தையை வளர்த்தெடுப்பது போல் வயலுக்கு சென்று கடலை பயிரை பாதுகாக்கிறோம். கடலை நல்ல நிலையில் வளர்ந்து முழு பரிணாம வளர்ச்சி அடைந்தால் சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விற்பனையாவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
கடலை சரியாக வளர்ந்து அரசாங்கத்தால் விலையும் நேர்த்தியாக கிடைத்தால் தான் விவசாயிகளால் முழு லாபம் அடைய முடியும். எனவே ஒவ்வொரு தென்னந்தோப்பிலும் தென்னைகளுக்கு நடுவே இதுபோன்று ஊடுபயிராக விவசாயிகள் கடலை சாகுபடி செய்து வந்தால் கூடுதலான வருமானம் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.