கள்ளக்குறிச்சி பகுதியில் மரவள்ளி கிழங்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி பகுதியில் மரவள்ளி கிழங்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மூலக்காட்டை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் பேசுகையில், கொடியான் கிராமத்தில் அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்து பல ஆண்டுகள் ஆகியும் தொடங்கப்படவில்லை. மூலக்காடு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
கம்பி வேலி
சின்னசேலத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் பேசும் போது, ஈரியூர், செம்பாக்குறிச்சி, நயினார்பாளையம் ஆகிய பகுதி வனப்பகுதிகளில் உள்ள காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அருகில் உள்ள விளைநிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.
எனவே பயிர்களை பாதுகாக்க அரசு சார்பில் கம்பி வேலி அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி பகுதி மற்றும் கல்வராயன் மலையில் மரவள்ளிக் கிழங்குகள் அதிகமாக பயிர் செய்யப்படுவதால் அரசு மூலம் கள்ளக்குறிச்சி பகுதியில் நேரடி மரவள்ளி கிழங்கு கொள்முதல் நிலையமும், மரவள்ளி சேகோ பேக்டரியும் அமைக்க வேண்டும் என்றார்.
ஏரி ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும்
உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேலு பேசும்போது, உலகங்காத்தான் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு, இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அரசே இடுபொருட்கள் வழங்க வேண்டும் என்றார். கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருநாதன் பேசுகையில், நெடுமானூர், மூரார்பாளையம், ஆலத்தூர், சிறுவங்கூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சர்க்கரை ஆலைக்கு மோகூர் சோமண்டார்குடி, சடையம்பட்டி வழியாக கரும்பு பாரம் ஏற்றிக்கோண்டு வாகனங்கள் செல்கிறது. அந்த சாலையின் குறுக்கே மின்கம்பி தாழ்ந்த நிலையில் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. தோட்டக்கலை துறை மூலம் எந்தெந்த திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது என விவசாயிகளுக்கு சரிவர தெரியப்படுத்துவதில்லை. இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.
இதனை கேட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் வைத்துள்ள அனைத்து கோரிக்கைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், விவசாய சங்கபிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.