பென்னிகுயிக் சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை


பென்னிகுயிக் சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை
x

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு 126 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, லோயர்கேம்பில் உள்ள பென்னிகுயிக் சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேனி

தென்தமிழகத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையை கட்டினார். இந்த அணையில் இருந்து முதன்முதலாக கடந்த 1895-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு இன்றுடன் 126 ஆண்டுகள் நிறைவடைந்தது. 127-வது ஆண்டு பிறந்ததையொட்டி அதை கொண்டாடும் வகையில் கூடலூர் அருகே லோயர்கேம்பில் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு 5 மாவட்ட விவசாய சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்படி பாரதீய கிஷான் சங்கம், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், இயற்கை வேளாண் விவசாயிகள் சங்கம், 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்கம், பெரியார்- வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தினர். மேலும் ஏரானமான பெண்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து குருவனூற்று பாலம் அருகே முல்லைப்பெரியாற்று தண்ணீரில் விவசாயிகள் மலர் தூவி வணங்கினர்.


Related Tags :
Next Story