விதை, உரத்தை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்- விவசாயிகள்


விதை, உரத்தை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்- விவசாயிகள்
x

விதை, உரத்தை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருவாரூர்

விதை, உரத்தை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டவருவாய் அலுவலர் சிதம்பரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, வேளாண்மை இணை இயக்குனர் ரவீந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

சேதுராமன்:- அதம்பார் நிம்மேலி வாய்க்கால் ஆகாயதாமரைகள் மண்டி கிடப்பதால் தண்ணீர் பாசனம் தடைப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தூர்வாரும் பணிகளை கிராம பாசனதாரர் விவசாயிகள் சபைகளிடம் ஒப்படைத்தால் தான் முழுமையாக பணி நடைபெறும். வயல்வழி சாலை அமைத்து தர வேண்டும். விதை, உரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும்.

முகேஷ்:- குறுவை பயிருக்கு காப்பீடு செய்யப்படாமல் விடுபட்டு போனது. எனவே சம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனுமதி அளிக்க கூடாது

தம்புசாமி:- டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் போன்ற திட்டங்களுக்கு மறைமுகமாக அனுமதி அளிக்க கூடாது.

அழகர்ராஜா:- வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை திட்டங்கள் முழுமையாக விவசாயிகளுக்கு சென்றடைவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. இந்த குறைபாட்டை களைய வேண்டும்.

மானியம்

பாலகுமாரன்:- நடுத்தர வயதுடைய விதைகள் வேளாண் விரிவாக்க மையத்தில் இல்லை. எனவே வெளிச்சந்தையில் விதைகள் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அதற்குரிய மானியத்தை அரசு வழங்க வேண்டும்.

கலெக்டர்:- திருவாரூர் மாவட்டத்தில் 61 ஆயிரத்து 588 எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. சம்பா பருவத்தில் நேரடிநெல் விதைப்பு முறையிலும், செம்மை நெல் சாகுபடி, நடவுமுறையிலும் இதுவரை ஆயிரத்து 654 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடிக்கு தேவையான விதை, இடுபொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் விவசாயிகள் ஆதார் விவரங்களை வருகிற 31-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்தால் மட்டுமே உரிய தவணை விடுவிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story