விவசாயிகள் வேளாண்மை விற்பனை மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் - கலெக்டர் தகவல்


விவசாயிகள் வேளாண்மை விற்பனை மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் - கலெக்டர் தகவல்
x

விவசாயிகள் வேளாண்மை விற்பனை மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வார்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, நசரத்பேட்டை, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய 8 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் அனைத்து பொருட்களையும் இந்திய அளவில் சந்தைப்படுத்தும் வசதிகள் செங்குன்றம், திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம்) திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

மின்னணு தேசிய வேளாண் சந்தையானது ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் விவசாயிகள், வியாபாரிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பதப்படுத்துவோர் ஆகியோரை ஒருங்கிணைத்து தேசிய அளவில் வர்த்தகம் புரிய ஒரே மாதிரியான சந்தையை உருவாக்க வழிவகை செய்கிறது.

இந்த திட்டத்தில் விவசாயிகளின் விலைப்பொருளானது தரம் பிரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு அதன் விவரங்கள் மின்னணு தேசிய வேளாண் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால் நாடெங்கிலும் உள்ள வியாபாரிகள் அதன் விவரத்தை பார்த்து விலை பொருட்களுக்கான விலையினை இணையம் வழியாகவே பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான தொகையானது நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இதனால் விவசாயிகளின் விலைப்பொருளுக்கு தரத்திற்கேற்ப விலை பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது. இதனால் விவசாயிகளுக்கு இடைத்தரகரின்றி விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பண்ணை வழி வர்த்தகமும் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் திருவள்ளூர் மாவட்ட வணிகர்கள் அகில இந்திய அளவில் கொள்முதல் செய்வதற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் மேற்கண்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் செயல்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மற்றும் பிற மாநிலத்தின் சந்தையில் உள்ள வேளாண் விலை பொருட்களின் விலையை அறிய விரும்பினாலும் விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் தெரிவிக்கப்படும்.

இத்திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகள் தங்கள் ஆதார் நகல், வங்கி பாஸ் புத்தக நகல், செல்போன் எண்ணுடன் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு திருவள்ளூர் 7358572301, திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை 9080473949, நசரத்பேட்டை 9962437645, செங்குன்றம் 7904620104, பொன்னேரி 952045432, கும்மிடிப்பூண்டி மற்றும் பள்ளிப்பட்டு 9994605163 -ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story