குறுவை பயிரை காப்பாற்றக்கோரி தஞ்சையில், விவசாயிகள் சாலை மறியல்


குறுவை பயிரை காப்பாற்றக்கோரி தஞ்சையில், விவசாயிகள் சாலை மறியல்
x

குறுவை பயிரை காப்பாற்றக்கோரி தஞ்சையில், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

குறுவை பயிரை காப்பாற்றக்கோரி தஞ்சையில், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விவசாயிகள் சாலை மறியல்

தஞ்சையை அடுத்த காட்டூர் கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக கிளை வாய்க்காலில் பாசனத்துக்கான தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பணிகள் முடிந்த பின்னரும் தண்ணீர் திறக்கப்படாததால் 500 ஏக்கருக்கு மேல் குறுவை பயிர் பாதிக்கப்பட்டு கருகும் நிலையில் உள்ளது.

இதனால் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட்டு குறுவை பயிரை காப்பாற்ற வலியுறுத்தி தஞ்சை-மன்னார்குடி சாலையில் காட்டூர் கிராமத்தில் விவசாயிகள் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

சாலையில் தடுப்புகள் அமைத்தும், இருசக்கர வாகனங்களை குறுக்கே நிறுத்தியும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த போலீசாரும், அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட முயற்சி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை ஏற்று விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தண்ணீர் திறக்க கோரிக்கை

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, சூரக்கோட்டையில் இருந்து செல்லக்கூடிய கிளை வாய்க்கால் மூலமாக காட்டூர், வரவுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 1000 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்து வருகிறோம். தண்ணீர் முறை வைத்து அனுப்புவதும், கிளைவாய்க்கால்களில் தண்ணீர் வராத காரணத்தினாலும் குறுவை சாகுபடி செய்த வயல்கள் அனைத்தும் காய்ந்து வருகிறது.

இன்னும் பல பகுதிகளில் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி தற்போது வயல்கள் தரிசு நிலமாக மாறிவிட்டது. எனவே உடனடியாக கிளை வாய்க்காலில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிளை வாய்கால்களை முறையாக சரி செய்ய வேண்டும் என்றனர்.


Next Story