பயிர் காப்பீடு தொகை கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்


பயிர் காப்பீடு தொகை கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 20 Oct 2023 1:00 AM IST (Updated: 20 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடியில் பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை

இளையான்குடி

பயிர் காப்பீடு

இளையான்குடி வட்டாரத்தில் 12 வருவாய் கிராமங்களுக்கு மட்டும் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. 42 வருவாய் கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கவில்லை. மேலும் 33 சதவீதம் மழை இன்றி நெல் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது. அதிலும் பல்வேறு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவில்லை. இதனால் பிரதம மந்திரியின் காப்பீட்டு தொகை கட்டிய அனைத்து விவசாயிகளும் இளையான்குடி சந்தை பேட்டையில் ஒன்றுகூடி தாலுகா அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து தாலுகா அலுவலக நுழைவாயில்களை மூடி துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், இளையான்குடி இன்ஸ்பெக்டர் ராபர்ட் செயின் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.

ஆர்ப்பாட்டம்

முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்கள் கருமலை கதிரேசன், மதுரை வீரன், வக்கீல்கள் ஜான் சேவியர் பிரிட்டோ, சிவகுமார், கால்நடைகள் மேய்ச்சல் நில சங்க தலைவர் ராஜீவ் காந்தி, விவசாய சங்க நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இதையடுத்து வேளாண்மை உதவி இயக்குனர் தங்கபாண்டியன், இளையான்குடி தாசில்தார் கோபிநாத், வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாய சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க அரசிடம் பரிந்துரைப்பதாக கூறினர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் இளையான்குடி வட்டார விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story