தகவல் தெரிவிக்காமல் கோவில் நிலத்தை ஏலம் விட்டதால் அறநிலையத்துறை அதிகாரியுடன் விவசாயிகள் வாக்குவாதம் கச்சிராயப்பாளையம் அருகே பரபரப்பு
கச்சிராயப்பாளையம் அருகே தகவல் தெரிவிக்காமல் கோவில் நிலத்தை ஏலம் விட்டதால் அறநிலையத்துறை அதிகாரியுடன் விவசாயிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே வடக்கநந்தலில் பெருமாள் கோவில் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலுக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கரில் விளைநிலம் உள்ளது. இந்த கோவில் மற்றும் நிலங்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், விவசாய நிலங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் ஆண்டுதோறும் ஏலம் விடுவது வழக்கம்.
அவ்வாறு ஏலம் எடுக்கும் விவசாயிகள், அதில் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தாண்டுக்கான ஏலம் விடுவதற்கான கூட்டம் பெருமாள் கோவில் வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதில் அறநிலையத்துறை செயல் அலுவலர் சங்கர் தலைமையில் ஏலம் விடப்பட்டது. அப்போது ஏற்கனவே ஏலம் எடுத்து, தற்போது அனுபவித்து வரும் விவசாயிகளுக்கு முறையாக முன்னறிவிப்பு கொடுக்காமல் ஏலம் விட்டதாக தெரிகிறது.
இதனால் ஒரு சில விவசாயிகளுடன் மட்டுமே ஏலம் விடும் பணி நடந்தது. இதற்கிடையே கடந்த முறை ஏலம் எடுத்திருந்த விவசாயிகள் அங்கு திரண்டு வந்து, எங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் எப்படி நீங்கள் ஏலம் விடலாம் என்று கூறி அறநிலையத்துறை செயல் அலுவலர் சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர். இருப்பினும் ஏலத்தில் பெரும்பாலான விவசாயிகள் பங்கேற்காததால், பல ஏக்கர் விளை நிலங்கள் ஏலம் போகாமல், பாதியிலேயே ஏலம் விடும் பணி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.