தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை


தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
x

வெம்பக்கோட்டை பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

விருதுநகர்

தாயில்பட்டி

வெம்பக்கோட்டை பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தக்காளி சாகுபடி

வெம்பக்கோட்டை அருகே உள்ள சங்கரபாண்டியபுரம், வால்சாபுரம், இ.ராமநாதபுரம், பாண்டியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.200 தாண்டி விற்பனை ஆனதால் தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற ேநாக்கத்தில் ஆர்வத்துடன் தக்காளியை விவசாயிகள் சாகுபடி செய்தனர். ஆனால் தக்காளி விலை படிப்படியாக குறைந்தது தற்போது கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவு உட்கொள்வார்கள் ஆதலால் தக்காளி அதிக அளவில் தேவைப்படும் என நினைத்திருந்த நிலையில் தக்காளி வரத்து அதிகமாக இருந்ததால் சந்தையில் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

ரூ.15-க்கு விற்பனை

இதுகுறித்து வால்சாபுரம் விவசாயி புஷ்பராஜ் கூறியதாவது:-

சங்கரபாண்டியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்து இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தக்காளி ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை ஆனது. அதுவும் மக்களுக்கு தேவையான அளவு கிடைக்கவில்லை. தக்காளி விலை ஏற்றத்தால் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இதனால் தக்காளிக்கு ஓரளவு விலை கிடைக்கும் என்ற நோக்கத்தில் சாகுபடி செய்தோம். ஆனால் தற்போது தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து விட்டது. கிலோ ரூ.15-வரை விற்பனை செய்யப்படுவதால் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சந்தைகளில் தக்காளி வரத்து அதிகமாக இருப்பதால் விலை ஏறுமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story