கம்பம் பள்ளத்தாக்கில் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கம்பம் பள்ளத்தாக்கில் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு அடுத்தப்படியாக தென்னை, திராட்சை, கொய்யா, காய்கறி உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதனால் பிற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து விளைப்பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் தற்போது பப்பாளி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கிணற்று பாசனத்தின் மூலமும், சொட்டுநீர் பாசனம் மூலமும் விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர். இதற்காக விவசாயிகள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 'ரெட்லேடி', சிந்தா ஆகிய 2 ரகங்களை சேர்ந்த பப்பாளி மரக்கன்றுகளை வாங்கி வந்து, நடவு செய்கின்றனர்.
இதில் 'ரெட்லேடி' ரக பப்பாளிக்கு வெளிமாநில மார்க்கெட்டுகளில் நல்ல கிராக்கி உள்ளதால் கம்பம் பகுதியில் இந்த ரகங்களை விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்கின்றனர். இவை நடவு செய்த 6-வது மாதத்தில் விளைச்சல் அடைந்து விடுகிறது. 8-வது மாதத்தில் காய்களை அறுவடை செய்து விடலாம். ஒரு மரத்தில் இருந்து 40 கிலோ வரை பப்பாளி கிடைக்கும். ஒரு கிலோ பப்பாளி ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கும். நல்ல வருமானம் கிடைப்பதால் பப்பாளி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.