வெளுத்து வாங்கிய கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
கரூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வறட்சி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பரப்பளவில் மாநில அளவில் 2-வது பெரிய தொகுதியாகும். இத்தொகுதியின் தலைமையிடமான அரவக்குறிச்சி வட்டார பகுதியில் மொத்தம் 20 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி, ஒரு நகராட்சி உள்ளன. இப்பகுதியில் எந்த விதமான தொழிற்சாலைகளும் இல்லை. குறிப்பாக, இப்பகுதியில் பாசன வசதி எதுவும் இல்லாததால் விவசாயிகள் மானாவாரி விவசாயத்தை நம்பியுள்ளனர். இப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான பனை மரங்கள் காய்ந்து இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. தற்போதுள்ள கிணற்றில் உள்ள தண்ணீர் மற்றும் நிலத்தின் ஈரப்பதத்திற்கும் ஏற்ப சிலர் கம்பு, சோளம் மற்றும் கேழ்வரகு போன்ற தானியப் பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
அரவக்குறிச்சி பகுதியில் பல இடங்களில் சுமார் 1,000 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு அமைத்தும் தண்ணீர் கிடைப்பதில்லை. வரும் காலங்களில் ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அரவக்குறிச்சி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவியது.
கனமழை
இதனால் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் கிணற்றில் உள்ள சிறிதளவு நீரைக் கொண்டு விவசாயிகள் தங்களின் ஆடு, மாடுகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்நிலையில் அரவக்குறிச்சி பகுதியில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு வந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது. தொடர்ந்து இரவு 7 மணி முதல் 8 மணி வரை கனமழை பெய்தது. இந்த மழையால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.
சாலை மற்றும் தெருக்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த மழையானது ஆடு, மாடுகளுக்கு தீவனங்கள் வளர்வதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதுபோல் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வந்தால் விவசாயம் செழிப்பதற்கும், பொதுமக்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
பல்வேறு பகுதிகளில்...
இதேபோல் தோகைமலை, குளித்தலை, மாயனூர், சித்தலவாய், மகாதானபுரம், பஞ்சப்பட்டி, கிருஷ்ணராயபுரம், க.பரமத்தி, தென்னிலை, சின்னதாராபுரம், சூடாமணி, எலவனூர், புஞ்சை காளகுறிச்சி, நஞ்சை காளகுறிச்சி, அணைப்பாளையம், கடவூர், முள்ளிப்பாடி, மாவத்தூர், பாலவிடுதி, தரகம்பட்டி, வேலாயுதம்பாளையம், கூலக்கவுடனூர், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், கந்தம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புதுகுறுக்குபாளையம், செக்குமேடு, மூர்த்திபாளையம், புகழூர், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம், உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இதில் லாலாபேட்டை, கே.பேட்டை, மாயனூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. ஆங்காங்கே இருந்த பள்ளங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சில இடங்களில் விட்டுவிட்டு மின்சாரம் இருந்தது. மழையின் காரணமாக சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கரூர் நகரப்பகுதியில் தூரல் மழை மட்டுமே பெய்ததால் இப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.