நகராட்சி நிர்வாகத்திற்கு விவசாயிகள் பாராட்டு
திருவள்ளூர் நகர் பகுதியில் பன்றிகள் பிடிக்கப்பட்டதை அடுத்து நகராட்சி நிர்வாகத்திற்கு விவசாயிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் தென்பாதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், திட்டை ரோடு, கீழ தென்பாதி, மேல மாரியம்மன் கோவில் தெரு, கோவிந்தராஜ் நகர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் பன்றிகள் சுற்றித் திரிந்தன. மேலும் நகர் பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரில் ஏராளமான போலீஸ் பாதுகாப்போடு நகராட்சி ஊழியர்கள் மற்றும் பன்றி பிடிப்பவர்கள் உதவியோடு சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த 68 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து நேற்று விவசாய சங்கத் தலைவர் நடராஜன் தலைமையில் விவசாயிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நகராட்சி அலுவலர் முன்பு திரண்டு வெடி வெடித்து இனிப்பு வழங்கி நகராட்சி ஆணையர் மற்றும் நகர சபை தலைவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.