மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி தூக்குப்போடுவதுபோல் விவசாயிகள் நூதன போராட்டம்


மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி  தூக்குப்போடுவதுபோல் விவசாயிகள் நூதன போராட்டம்
x

அம்மாப்பேட்டையில் மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் தூக்குப்போடுவதுபோல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டையில் மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் தூக்குப்போடுவதுபோல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலவச மின்சாரம்

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் விளை நிலத்திற்கு இலவச மின்சாரம் வழங்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறி அம்மாப்பேட்டை வடக்கு பிரிவு மின்சார வாரிய அலுவலகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தூக்குப்போடுவதுபோல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மின்வாரியத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றியக்குழு தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷம்

அப்போது அம்மாப்பேட்டை வடக்கு பிரிவு மின்சார வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மின்கம்பி பற்றாக்குறையால் தமிழக அரசு வழங்கும் இலவச மின்சாரம் கிடைக்கவில்லை என்று கவலை தெரிவித்த விவசாயிகள், மின் ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அதனை தொடர்ந்து மின்சார வாரிய அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவி தாமரைச்செல்வி, கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் ராஜாராமன், ஒன்றியக்குழு நிர்வாகிகள் பழனிச்சாமி, கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மின்சார வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதிக்குள் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story