விவசாயி தீக்குளிக்க முயற்சி


விவசாயி தீக்குளிக்க முயற்சி
x

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றார்.

திண்டுக்கல்

தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத் தலைமையில் நேற்று நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கோரிக்கை மனு கொடுப்பதற்காக கையில் பையுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் திடீரென தனது பையில் இருந்த கேனை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார் ஓடிச்சென்று அவரை தடுத்தனர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

நில அபகரிப்பு புகார்

விசாரணையில் அவர், பழனியை அடுத்த பெரியகலையம்புத்தூரை சேர்ந்த தங்கவேல் (வயது 65) என்பதும், அவருடைய நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்து வருவதால் வாழ்வாதாரம் பறிபோகிவிடுமோ என்ற அச்சத்தில் கலெக்டர் அலுவலகம் வந்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். மேலும் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை எச்சரித்த போலீசார், அவரின் கோரிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும்படி அறிவுறுத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

ஆதார் அட்டை, ரேஷன் கார்டு

இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த ராமலிங்கம்பட்டியை சேர்ந்த மகேஷ்வரன் (44), அவருடைய மனைவி சித்ரா (33) ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இவர்கள், தங்களது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இணைப்பு வழங்கப்படாததால், அவர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு கொடுக்கும்படி கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

குடும்பத்தினருக்கு பாதுகாப்பு

திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்த தெய்வானை என்பவர், தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அவர் கொடுத்த மனுவில், எனது கணவரை கொலை செய்தவர்களில் ஒருவர் கூலிப்படையை ஏவி எனது குடும்பத்தினரையும் கொல்ல முயற்சிக்கிறார். எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நேற்று நடந்த கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 220 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் உத்தரவிட்டார்.


Next Story