செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்
பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வந்தவாசியில் விவசாயி ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி
பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வந்தவாசியில் விவசாயி ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயி
வந்தவாசியை அடுத்த கூத்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 40). விவசாயி. இவரது விவசாய நிலத்துக்கு செல்லும் பொதுவழியை சிலர் ஆக்கிரமித்துள்ளனராம். இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம் கூத்தம்பட்டு கூட்டுச்சாலையில் உள்ள செல்போன் டவரின் மேல் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தினார்.
தகவலறிந்த தாசில்தார் ஆர்.பொன்னுசாமி தலைமையிலான வருவாய்த்துறையினர், தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சீனுவாசன், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், பொன்னூர் காவல் நிலைய போலீஸார், வந்தவாசி தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் அவரை கீழிறங்கச் செய்ய முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றினால்தான் இறங்குவேன் என்று ராஜாராம் கூறி கீழிறங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 4 மணி நேரமாக போராட்டம் மேற்கொண்ட ராஜாராம் போராட்டத்தை கைவிட்டு டவரிலிருந்து கீழிறங்கினார்.