விழுப்புரம் அருகே தறிகெட்டு ஓடிய கார் மோதி விவசாயி சாவு 3 பேர் காயம்
விழுப்புரம் அருகே தறிகெட்டு ஓடிய கார், மோதி விவசாயி பலியானார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம் விராட்டிக்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 62), விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
விழுப்புரம் அருகே அய்யூர்அகரம் என்ற இடத்தில் வந்தபோது அதே திசையில் பின்னால் வந்த காரின் இடதுபுற முன்பக்க டயர் திடீரென வெடித்ததில் தறிகெட்டு ஓடிய கார், முன்னால் சென்ற ராஜியின் மோட்டார் சைக்கிள் மீதும் மற்றும் அவருக்கு முன்னால் சென்ற 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள் ஆகியவற்றின் மீதும் மோதியது.
விவசாயி பலி
இந்த விபத்தில் ராஜி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற வாகனங்களில் சென்ற விழுப்புரம் அப்பாசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் மனைவி சரஸ்வதி (36), திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிகொண்டப்பட்டு பகுதியை சேர்ந்த சஞ்சீவ்காந்தி (45), விழுப்புரம் அருகே செங்கமேட்டை சேர்ந்த சரவணன் (35) ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனே அவர்கள் 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.