குன்னம் அருகே டிப்பர் லாரி மோதி விவசாயி பலி
குன்னம் அருகே டிப்பர் லாரி மோதி விவசாயி பலியானா். இதையடுத்து அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டிப்பர் லாரி மோதி விவசாயி பலி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் பிரபாகரன் (வயது 38), விவசாயி. இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் நேற்று மாலை பெரம்பலூருக்கு தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது க.எறையூர் பிரிவு சாலையில் சென்றபோது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மொபட் மீது மோதியது.
இந்த விபத்தில் டிப்பர் லாரியின் பின்பக்க சக்கரத்தில் அடிபட்டு பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
சாலை மறியல்
இதையறிந்த பிரபாகரனின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அரியலூர்-பெரம்பலூர் ரோட்டில் க.எறையூர் பிரிவு சாலையில் கூடி பிரபாகரனின் உடலை எடுக்க விடாமல் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி, பாடாலூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது க.எறையூர் பகுதியில் இயங்கும் கல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும். அனுமதிக்கப்பட்ட எடையுள்ள கற்களை மட்டுமே லாரியில் ஏற்றி செல்ல வேண்டும். அதேபோல் கற்களை ஏற்றி செல்லும் போது தார்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்லவேண்டும். இறந்து போன பிரபாகரனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனைதொடர்ந்து மேற்கண்ட கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் பிரபாகரனின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்ல அனுமதித்தனர். பின்னர் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்ற வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவத்தால் அரியலூர்-பெரம்பலூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.