மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விவசாயி தற்கொலை


மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விவசாயி தற்கொலை
x

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 38). விவசாயி. மது குடிக்கும் பழக்கம் கொண்ட விநாயகம் அடிக்கடி தன்னுடைய மனைவி லதாவிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி குடி பழக்கத்தை கைவிடுமாறு தன்னுடைய கணவரிடம் பலமுறை மன்றாடியும் அவர் தொடர்ந்து மது குடித்து வந்தார்.

கடந்த மாதம் 23-ந் தேதி மீண்டும் விநாயகம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோபித்து கொண்டு சென்ற விநாயகம் தன்னுடைய வீட்டின் அருகே உள்ள வயல் வெளிக்கு சென்று வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த விநாயகம் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து லதா மணவாள நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்.


Next Story