நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை?


நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை?
x
தினத்தந்தி 3 July 2022 2:30 AM IST (Updated: 3 July 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

வீராணம் அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

வீராணம் அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி

சேலம் வீராணம் அருகே உள்ள வேட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அம்மாசி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியின் மகன் லோகநாதன் (வயது 47), விவசாயி. 2-வது மனைவியின் மகன் வெங்கடாசலம் (38). அம்மாசிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தில் 2 மகன்களும் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி நிலப்பிரச்சினை தொடர்பாக லோகநாதனுக்கும், வெங்கடாசலத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சர்வேயரை வைத்து நிலத்தை அளவீடு செய்து பிரித்து கொள்ளுமாறு அவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் நேற்று முன்தினம் லோகநாதனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக இறந்தார். கடந்த 26-ந் தேதி வெங்கடாசலம் தாக்கியதில் தான் லோகநாதன் காயமடைந்து இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். அதன்பேரில் போலீசார் வெங்கடாசலத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, லோகநாதன் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது இயற்கை மரணமா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றனர்.


Next Story