சாலையோரம் பூக்களை கொட்டி சென்ற விவசாயிகள்


சாலையோரம் பூக்களை கொட்டி சென்ற விவசாயிகள்
x
தினத்தந்தி 12 Oct 2023 7:30 PM GMT (Updated: 12 Oct 2023 7:30 PM GMT)

தேன்கனிக்கோட்டை பகுதியில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் சாலையோரம் பூக்களை கொட்டி சென்றனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை பகுதியில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் சாலையோரம் பூக்களை கொட்டி சென்றனர்.

பூக்கள் விலை வீழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை திறந்த வெளியிலும், பசுமை குடில்கள் அமைத்தும் சாகுபடி செய்துள்ளனர். இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் வரலட்சுமி நோம்பு, தசரா, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு விவசாயிகள் பூக்களின் விலை உயரும் என எதிர்பார்த்திருந்து காத்திருந்து செடிகளை பராமரித்து வந்தனர். ஆனால் தற்போது சாமந்தி, பட்டன் ரோஸ் ஆகிய பூக்கள் ஒரு கிலோ 2 ரூபாய்க்கு மட்டுமே விலை வீழ்ச்சி அடைந்து விற்கப்படுகிறது. இதனால் பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சாலையோரம் கொட்டி சென்றனர்

இதையொட்டி விளை நிலங்களில் பறித்த ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் வாகனங்களில் தேன்கனிக்கோட்டை அருகே தண்டரையில் ஓசூர் சாலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் டன் கணக்கில் பூக்களை சாலையோரம் கொட்டி விட்டு சென்றனர்.

இதற்கிடையே அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பூக்களை கண்டதும் வாகனங்களை நிறுத்தி சாக்குப்பை, பைகளில் பூக்களை அள்ளி சென்றனர். ஒரு சிலர் தாங்கள் அணிந்திருந்த `ஜெர்கினை' கழற்றி அதில் பூக்களை அள்ளி சென்றதை காணமுடிந்தது.


Next Story