விவசாய பணிகள் மும்முரம்
விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
தூறல் மழை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததாக கூறப்பட்டதால் நேற்றும் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் பள்ளி-கல்லூரிகளுக்கு 2-வது நாளாக நேற்றும் விடுமுறை அளித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டிருந்தார். ஆனால் நேற்று காலை தூறலாக மழை பெய்தது. பின்னர் மழை பெய்யவில்லை.
நிரம்பி வருகின்றன
இதற்கிடையே நேற்று முன்தினம் பெய்த தொடர் மழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்தது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. மேலும் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில் 17 ஏரிகள் நிரம்பியுள்ளன. தற்போது பெய்த மழையால் மற்ற ஏரிகளும் நிரம்பி வருகின்றன.
நீர் நிலைகளில் சிறியவர்கள், பெரியவர்கள் வேடிக்கை பார்ப்பதுடன், உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.
மேலும் விவசாய பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது விவசாய நிலங்களில் நாற்று நடுவதற்காக நிலங்களை தயார் செய்யும் பணிகளிலும், நாற்று நடும் பணிகளிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மழை அளவு விவரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பெரம்பலூர்-59, செட்டிக்குளம்-69, பாடாலூர்-76, அகரம்சீகூர்-98, லெப்பைக்குடிக்காடு-84, புதுவேட்டக்குடி-53, எறையூர்-38, கிருஷ்ணாபுரம்-46, தழுதாழை-54, வி.களத்தூர்-45, வேப்பந்தட்டை-58.
மாவட்டத்தில் மொத்தம் 680 மில்லி மீட்டர் மழை பதிவானது. சராசரியாக 61.82 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.