திருவள்ளூர் மாவட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியை பெருக்க மானிய விலையில் பண்ணை கருவிகள் - கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியை பெருக்க மானிய விலையில் பண்ணை கருவிகள் - கலெக்டர் தகவல்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியை பெருக்க மானிய விலையில் பண்ணை கருவிகள் வழங்கப்படும் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் 2022-23 மற்றும் ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி இயக்கத்தின் கீழ் பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்காக ரூ.42 லட்சம் செலவில் பண்ணை கருவிகள் 25 சதவீதம் மானிய விலையில் வழங்கி விவசாயிகளை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பருவ காலங்களில் கிடைக்கும் பசுந்தீவனத்தை அறுவடை செய்து பதப்படுத்தி வணிக ரீதியாக ஊறுகாய் புல் கட்டுகளாக தயாரிக்கலாம்.

பின்னர் அவற்றை கோடை காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக விற்பனை செய்யலாம். இந்த திட்டத்தில் குறைந்த அளவு விவசாய கருவிகளை கொண்டு அதிக சத்துள்ள தீவன புற்களை நீண்ட நாட்கள் பதப்படுத்தி வைக்க முடியும். அதற்கு குறைந்த அளவிலான முதலீடு மற்றும் உழைப்பு திறனே போதுமானது. ஊறுகாய் புல் மூட்டைகளை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யும் அலகு காஞ்சீபுரம், கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் அடங்கிய வடகிழக்கு மண்டலத்திற்கு ஒரு நபருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 12 முதல் 30 டன் புல் கட்டுகள் உற்பத்தி செய்யும் கருவி, 12 முதல் 30 டன் தீவனப்புற்கள் அறுவடை செய்யும் மற்றும் புல் நறுக்கும் கருவி, 60 எச்.பி முதல் 70 எச்.பி. திறன் கொண்ட டிராக்டர் போன்றவை அடங்கிய ரூ.42 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் 25 சதவீதம் மானியத்தில் அதிகபட்சம் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் பின் மானியமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 3,200 மெட்ரிக் டன் வரை வர்த்தக ரீதியாக ஊறுகாய் புல் உற்பத்தி செய்து விற்பனை செய்ய இயலும்.

எனவே இந்த திட்டத்தை பயன்படுத்தி பயன்பெற ஆர்வமுள்ள பால் உற்பத்தியாளர்கள், பால் பண்ணை உரிமையாளர்கள், தனிநபர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், கால்நடை வளர்ப்போர் ஆகியோர் அருகில் உள்ள கால்நடை நிலையங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயனாளியாக தேர்வு செய்யப்பட்டு பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story