விவசாய நிலங்களில் நடவு பணி தீவிரம்


விவசாய நிலங்களில் நடவு பணி தீவிரம்
x

வடகிழக்கு பருவமழை சீசனை தொடர்ந்து ஆர்.எஸ். மங்கலம், சோழந்தூர் உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாய நிலங்களிலும் நாற்று நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

வடகிழக்கு பருவமழை சீசனை தொடர்ந்து ஆர்.எஸ். மங்கலம், சோழந்தூர் உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாய நிலங்களிலும் நாற்று நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நல்லமழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயம் என்பது மிக மிக குறைவு. ஆண்டுதோறும் மழையை எதிர்பார்த்தே விவசாயிகள் நெல் நடவு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதியில் இருந்து தொடங்கியது. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், மங்கலம், சோழந்தூர், ஆனந்தூர், திருப்பாலைக்குடி, கழனிக்குடி, உள்ளிட்ட பல கிராமங்களிலும் நெல் விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக விவசாய நிலங்களில் தூவப்பட்ட நெல் விதைகள் பயிர்களாக வளர தொடங்கி உள்ள நிலையில் அந்த நெல் பயிர்கள் நன்றாக செழித்து வளர்வதற்காகவும், நெல் பயிர்களுக்கு இடையே கலைகள் வளராமல் இருப்பதற்காக உரம் தூவும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாற்றுநடும் பணி

மேலும் சோழந்தூர், மங்கலம் உள்ளிட்ட பல கிராமங் களிலும் விவசாயிகள் விவசாய நிலங்களில் நாற்று நடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பு இருந்தே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது நெற்பயிர்கள் வளர்வதற்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது.

அதனால் அதிக மழை பெய்தால் தான் நெற்பயிர்கள் வளர்வதற்கு நன்றாக இருக்கும். கடந்த ஆண்டு அதிகஅளவு பெய்த மழையால் நெல் விவசாயம் சிறப்பாக இருந்தது. இந்த ஆண்டும் நெல் விவசாயம் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story