100 வயதை கடந்த மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய குடும்பத்தினர்
100 வயதை கடந்த மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய குடும்பத்தினர்
திருபுவனத்தில் 100 வயதை கடந்த மூதாட்டி பிறந்தநாளை குடும்பத்தினர் கொண்டாடினர். இவர் நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
100 வயதை கடந்த மூதாட்டி
கும்பகோணம் அருகே திருபுவனம் காந்தி நகரில் வசிப்பவர் ஜெயலட்சுமி. 1923-ம் ஆண்டு பிறந்த இவருக்கு 100 வயது முடிந்துள்ளது. இதையடுத்து நேற்று ஜெயலட்சுமி பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் கொண்டாடினர். நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் பட்டு சேலை நெய்து வந்தார். கடந்த சில வருடங்களாக பட்டு சேலை நெய்வதற்கு தேவையான பட்டு நூலை தார் சுற்றி கொடுத்து வருகிறார். இவர் திருவட்டத்தில் பட்டு நூலை சுற்றும் வேகமே பார்க்கும் அனைவரையும் வியக்க வைக்கிறது. தனது வேலைகளை தானே பார்த்து வரும் இவருக்கு4 மகள்கள் உள்ளனர்.
3-வது மகளான கோமதி வீட்டில் தற்போது வசித்து வருகிறார். இவருக்கு பேத்தி பேரன்கள் என 12 பேரும், கொள்ளு பேத்தி, கொள்ளு பேரன் என 19 பேரும், எள்ளுப்பேரன் என 4 பேரும் மொத்தம் 35 பேர் உள்ளனர்.
ஆன்மிக புத்தகங்கள்
ஆரம்ப காலத்தில் 5-ம் வகுப்பு வரை படித்த இவர் தற்போது பகவத் கீதை போன்ற ஆன்மீக புத்தகங்களை படித்து வருகிறார். சைவ உணவுகளை மட்டும் உண்டு வரும் இவர் வீட்டில் தயாரிக்கும் எந்த உணவாக இருந்தாலும் சாப்பிடக்கூடியவர். இதே ஊரில்அவரது சகோதரி கவுசல்யா (வயது 80) வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 100 வயதை கடந்தாலும் சுறுசுறுப்பாக உள்ள ஜெயலட்சுமியை அந்தப்பகுதி மக்கள் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.