திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை வீழ்ச்சி
திண்டுக்கல் பூமார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அந்த பகுதியில் பயிரிடப்படும் பூக்கள் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதனால் பூச்செடிகளில் அதிக அளவில் பூக்கள் மலர்ந்தன. அந்த வகையில் திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு நேற்றைய தினம் 10 டன் பூக்கள் விற்பனைக்கு வந்தன. இதில் சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவிந்தன. அதேநேரம் திருமண முகூர்த்தம், கோவில் திருவிழா போன்றவை இல்லாததால் பூக்களை வாங்குவதற்கு குறைந்த அளவிலேயே வியாபாரிகள் வந்திருந்தனர்.
பூக்கள் வரத்து அதிகரித்த நிலையில் குறைந்த அளவே பூக்கள் விற்பனை ஆகின. இதனால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அதிலும் சம்பங்கி பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த வாரம் கிலோ ரூ.100-க்கு விற்ற சம்பங்கி பூக்கள் நேற்றைய தினம் ரூ.5 முதல் ரூ.10 வரை மட்டுமே விற்பனை ஆனது. அதேபோல் ரோஜா பூக்களை வாங்க ஆட்கள் வராததால் வாசனை திரவிய தொழிற்சாலைக்கு விற்பதற்கு வெயிலில் உலர வைக்கப்பட்டன.
மேலும் மல்லிகைப்பூ ரூ.450-க்கும், கனகாம்பரம் ரூ.200-க்கும், செவ்வந்தி மற்றும் சாதிப்பூ ரூ.150-க்கும், கோழிக்கொண்டை, மரிக்கொழுந்து மற்றும் ரோஜா ரூ.35-க்கும், முல்லைப்பூ மற்றும் அரளிப்பூ ரூ.80-க்கும், தாமரைப்பூ ஒன்று ரூ.5-க்கும் விற்றது. பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.