பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டுவீட்
பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. தோ்தல் முடிவு வெளியிடப்பட்டதில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கட்சி 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.
ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இந்த தோல்வியால் பா.ஜனதாவுக்கு தென்இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்கிய கர்நாடகத்தை அக்கட்சி இழந்துள்ளது. மேலும் தென்இந்திய மாநிலங்களில் ஒன்றில் கூட பா.ஜனதா ஆட்சி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். சர்வாதிகாரம் - மதவாதம் - மக்களைச் சுரண்டும் ஊழல் என்றிருந்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும். பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது." என்று பதிவிட்டுள்ளார்.