உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி
உப்புக்கோட்டை பகுதியில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கூழையனூர், குச்சனூர், பாலார்பட்டி, குண்டல் நாயக்கன் பட்டி, உப்புக்கோட்டை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முட்டைகோஸ், பீட்ரூட், தக்காளி முள்ளங்கி, கத்தரிக்காய், என அனைத்து வகையான காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் ஆண்டின் அனைத்து பருவத்திலும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுவது சிறப்பம்சமாகும்.
இங்கு முல்லைப்பெரியாற்று பாசனம் மூலம் விளையும் காய்கறிகள் மிகவும் சுவையாக இருப்பதால் வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களிலும் இந்த பகுதி காய்கறிகளுக்கு தனி மவுசு உள்ளது. இந்நிலையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது தக்காளி விளைச்சல் அடைந்து பறிக்கப்பட்டு தரம் பிரித்து விற்பனைக்காக சந்தைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நோய் தாக்குதல் இல்லாததால் தக்காளி நல்ல விளைச்சல் அடைந்து உள்ளது. ஆனால் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 15 கிலோ அடங்கிய தக்காளி கூடை கடந்த வாரம் ரூ.350-க்கு விற்பனையானது, தற்போது ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.