திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்களின் விலை வீழ்ச்சி
திருமண முகூர்த்தம் இருந்தும் மழையில் சேதமானதால், திண்டுக்கல் மார்க்கெட்டில் விற்பனை குறைந்து பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்தது.
திருமண முகூர்த்தம் இருந்தும் மழையில் சேதமானதால், திண்டுக்கல் மார்க்கெட்டில் விற்பனை குறைந்து பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்தது.
25 டன் பூக்கள் விற்பனை
திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளப்பட்டி, ஏ.வெள்ளோடு, கம்பிளியம்பட்டி, ரெட்டியார்சத்திரம், நிலக்கோட்டை உள்பட பல ஊர்களில் பூக்கள் சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படுகிற பூக்கள் திண்டுக்கல், நிலக்கோட்டை ஆகிய மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்படும் பூக்கள், திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் தினமும் சராசரியாக 10 டன் பூக்கள் விற்பனை ஆகும். அதுவே திருமணம், திருவிழா காலத்தில் 25 டன் வரை பூக்கள் விற்பனை ஆகிறது.
விலை வீழ்ச்சி
இந்த நிலையில் புரட்டாசி மாதத்தில் கோவில் திருவிழா, திருமணம் ஆகியவை நடத்தப்படுவது வெகுவாக குறைந்தது. இதனால் திண்டுக்கல் மார்க்கெட்டில் தினமும் 5 டன் பூக்கள் கூட விற்காத நிலை ஏற்பட்டது. மேலும் பூக்களின் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.
எனவே புரட்டாசி முடிந்து, எப்போது ஐப்பசி மாதம் தொடங்கும் என்று பூ விவசாயிகளும், வியாபாரிகளும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். சில விவசாயிகள், பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிட்டனர்.
மழையால் சேதம்
இதற்கிடையே இன்று (புதன்கிழமை) ஐப்பசி மாதத்தின் முதல் நாள் ஆகும். மேலும் ஐப்பசி மாதத்தின் முதல் நாளே திருமண முகூர்த்த நாளாக அமைந்தது. இதனால் பூக்கள் விற்பனை அதிகரித்து, விலையும் கணிசமாக உயரும் என்று விவசாயிகள் நினைத்தனர்.
இதையொட்டி திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு ஒரு மாதத்துக்கு பிறகு நேற்று அதிக அளவில் பூக்கள் விற்பனைக்கு வந்தன. அதேநேரத்தில், கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் பூக்கள் சேதம் அடைந்து இருந்தன.
இதனால் உள்ளூர், வெளியூர் வியாபாாிகள் பூக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதன்காரணமாக பூக்கள் விற்பனை குறைந்து, விலையும் எதிர்பார்த்த அளவு போகவில்லை. ஆனால் மல்லிகைப்பூ மட்டும் வரத்து குறைவாக இருந்ததால் கிலோ ரூ.800-க்கு விற்றது.
விவசாயிகள் ஏமாற்றம்
அதேநேரம் கனகாம்பரம் ரூ.300-க்கும், முல்லை மற்றும் சாதிப்பூ ரூ.250-க்கும், செவ்வந்தி மற்றும் அரளி ரூ.120-க்கும் விற்பனையானது. மேலும் சம்பங்கி மற்றும் பன்னீர் ரோஜா ரூ.60-க்கும், செண்டுமல்லி மற்றும் கோழிக்கொண்டை ரூ.15-க்கும் விற்பனை ஆனது.
பூக்கள் விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் ஆயுதப்பூஜையை முன்னிட்டு, பூக்களின் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் திருப்தி அடைந்தனர்.