மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்தது. டன் ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனையானது.
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மரவாபாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புபாளையம், புன்னம்சத்திரம், நடையனூர், கொங்கு நகர், மூலிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மரவள்ளிக்கிழங்குகளை அதிகளவில் பயிரிட்டு வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கை மில் அதிபர்கள் டன் ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கி சென்றனர். தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2,500 வரை சரிவடைந்து ரூ.7,500-க்கு விற்பனையாகிறது. அதேபோல் கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை சரிவடைந்து ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.மரவள்ளிக்கிழங்கு வரத்து அதிகரித்து உள்ளதாலும், ஜவ்வரிசி விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதாலும் மரவள்ளிக்கிழங்கின் விலை சரிவடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.