மரக்காணத்தில் கள்ளச் சாராய உயிரிழப்பு 14 ஆக உயர்வு


மரக்காணத்தில் கள்ளச் சாராய உயிரிழப்பு 14 ஆக உயர்வு
x
தினத்தந்தி 16 May 2023 10:03 AM IST (Updated: 16 May 2023 10:12 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர்.

அடுத்த சில நிமிடங்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அன்று இரவே எக்கியார்குப்பத்தை சேர்ந்த சங்கர் (வயது 55), சுரேஷ் (49), தரணிவேல் (50) ஆகிய 3 பேர் இறந்தனர். நேற்று முன்தினம் எக்கியார்குப்பத்தை சேர்ந்த ராஜமூர்த்தி (60), மலர்விழி (70), மரக்காணம் சம்புவெளி தெருவை சேர்ந்த மண்ணாங்கட்டி (47) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இந்த சூழலில் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எக்கியார்குப்பத்தை சேர்ந்த விஜயன் (55), மரக்காணத்தை சேர்ந்த சங்கர் (51), எக்கியார்குப்பம் கேசவவேலு (70), மஞ்சினி மகன் விஜயன் (55), ஆபிரகாம் (46), சரத்குமார் (55) ஆகியோரும் நேற்று சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இன்று காலை மேலும் ஒருவர் உயிரிழந்தநிலையில், கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதனால் மரக்காணம் எக்கியார் குப்பத்தில் கள்ளச் சாராய குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தி சரவணனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எக்கியார் குப்பத்தில் கள்ளச் சாராயம் குடித்த பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்துள்ளநிலையில், தற்போது கிளியனூர் பகுதியில் நடந்துள்ள சம்பவத்தால் அதிர்ச்சி நிலவுகிறது.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை கள்ளச்சாராயத்தால் மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story