தொழிலாளர்களின் ஆதார், பான் கார்டு மூலம் போலி நிறுவனங்கள் தொடக்கம்
குடியாத்தம் பகுதி தொழிலாளர்களின் ஆதார் மற்றும் பான் கார்டை பயன்படுத்தி போலி நிறுவனங்கள் தொடங்க உதவிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலி நிறுவனம்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிட்ட பலருக்கு பணம் வரவில்லை. குடியாத்தம் காதர்பேட்டை, முத்துக்குமரன்நகர், பலமநேர்ரோடு, சித்தூர்கேட், குறிஞ்சிநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான கூலித் தொழிலாளர்களுக்கும் பணம் வரவில்லை.
இதனால் அவர்கள் வேலூரில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது அவர்கள் பெயரில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், தென்காசி, மதுரை, கோவை, ஓசூர், ராணிப்பேட்டை, பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு அதில் பல லட்சம் ரூபாய் வணிகம் நடைபெற்றதாக கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
போலீஸ் விசாரணை
அந்த நிறுவனங்கள் பழைய இரும்பு வியாபாரம், பிளாஸ்டிக் வியாபாரம், கட்டுமான நிறுவனம், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட அவர் இதுகுறித்து குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
அதன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதியிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர்.
3 பேர் மீது வழக்குப்பதிவு
விசாரணையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரணாம்பட்டை சேர்ந்த ஒருவர், குடியாத்தம் பகுதியில் உள்ள பீடி மற்றும் பல்வேறு கூலி தொழில் செய்பவர்களிடம் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களின் ஆதார், பான்கார்டு மற்றும் செல்போன் எண்ணை பெற்று ஆம்பூரை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
அந்த நபர் தொழிலாளர்களின் ஆதார், பான்கார்டு ஆகியவற்றை மோசடியான நபர்களுக்கு கொடுத்து அதன் மூலம் பல்வேறு போலி நிறுவனங்கள் தொடங்கி, ஜி.எஸ்.டி. நம்பர் பெறப்பட்டு, பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றதாக ஜி.எஸ்.டி. கட்டி உள்ளனர். இதனால் உண்மையான தொழிலாளர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க வில்லை என்பது தெரிய வந்தது.
குடியாத்தம் டவுன் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக பேரணாம்பட்டு வீராசாமி தெருவை சேர்ந்த சசிகுமார் (வயது 26), கிஷோர் (25), முஸ்தாஜ் (25) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் பொதுமக்களிடம் ஆதார், பான்கார்டு உள்ளிட்டவைகளை பெற்று மோசடி நபர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. மோசடி நிறுவனங்கள் தொடங்கிய நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.