மோட்டார் வாகன அபராத தொகையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்


மோட்டார் வாகன அபராத தொகையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்
x

மோட்டார் வாகன அபராத தொகையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்லடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

திருப்பூர்


மோட்டார் வாகன அபராத தொகையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்லடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

தமிழகத்தில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் செய்து அபராதங்கள் உயர்த்தப்பட்டு இருப்பது மிகவும் அதிகமான தொகையாக உள்ளது. எனவே அபராத தொகையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மின் கட்டண உயர்வு சுமையால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பாதிப்படைந்துள்ளது. விசைத்தறிகளுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஆண்டு முழுவதும் சீரான விலையில் நூல் விற்பனை நடைபெறுவதை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறி கைது செய்து வருவதை ஏற்க முடியாது. மீனவர்கள் கடலுக்குள் அச்சமின்றி மீன் பிடிக்கும் நிலையை இரு நாட்டு அரசுகளும் உறுதி செய்ய வேண்டும். தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க அரசு அதிக அளவில் கொப்பரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்.

மக்கள் விரோத அரசு

கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. முழுமையான விசாரணை மேற்கொண்டு பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும். தமிழக அரசு இதில் தயவு தாட்சண்யம் பார்க்கக்கூடாது. முன்கூட்டியே தகவல் தெரிவிக்க தவறிய மாநில உளவு துறையை பலப்படுத்த வேண்டும். இந்தப் பிரச்சினையில், கருத்து சொன்னவர்களை விசாரணை செய்ய வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுவது நாகரீகமான செயல் அல்ல.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மக்கள் விரோத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் வீட்டு வரி, மின் கட்டணம் உயர்வு போன்றவையால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தேர்தல் வரும் போது மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் எந்த தெளிவும் இல்லை. நடுநிலையாளர்களுக்கு எது சரி, எது தவறு என்று புரிந்து கொள்ளும் வகையில் இல்லை.

புறவழிச்சாலை திட்டம்

பல்லடத்தில் 2-வது குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் அவசியம். பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும். பல்லடத்தில் நிலவும் போக்குவரத்து நெரிச்சல் பிரச்சினைக்கு புறவழிசாலை திட்டம் மூலம் தீர்வு காண வேண்டும். காரணம்பேட்டையில் பயன்பாடு இல்லாத பஸ் நிலையத்தை ஜவுளி பூங்காவாக மாற்றி அமைத்திட வேண்டும். அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை தாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், மாவட்ட தலைவர் சண்முகம், மாவட்ட பொதுச்செயலாளர் காரணம்பேட்டை சின்னசாமி, மேலிட பார்வையாளர் பொங்கலூர் வரதராஜ், மாவட்ட துணைத்தலைவர் ஜெகதீசன், நகர தலைவர் பிரண்ட்ஸ் முத்துக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story