நிரம்பி மறுகால் பாயும் கண்மாய்கள்


நிரம்பி மறுகால் பாயும் கண்மாய்கள்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம், பேரையூரில் தொடர் மழையால் நிரம்பி கண்மாய்கள் மறுகால் பாய்நது வருகின்றனர். திருமங்கலத்தில் கன மழையால் வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

மதுரை

பேரையூர்

திருமங்கலம், பேரையூரில் தொடர் மழையால் நிரம்பி கண்மாய்கள் மறுகால் பாய்நது வருகின்றனர். திருமங்கலத்தில் கன மழையால் வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

கண்மாய்கள் நிரப்பின

மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 2-ந் தேதி 30 மி.மீ. மழையும், 3-ந் தேதி 19 மி.மீ. மழையும், நேற்று 44 மி.மீ.மழையும் பெய்துள்ளது. இதனால் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஏ.பாரைப்பட்டி வேப்பங்குளம் கண்மாய், செங்குளம் கண்மாய், தட்சாங்குளம் கண்மாய், நக்கனேரி கண்மாய் ஆகிய கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. மேலும் இந்த தொடர் மழைக்கு பேரையூர் அருகில் உள்ள பி.ராமநாதபுரத்தை சேர்ந்த முனியாண்டி என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இ.கோட்டைப்பட்டியை சேர்ந்த மருதராணி என்பவருடைய வீடு, காளப்பன்பட்டியை சேர்ந்த சின்னன் என்பவருடைய வீடு, கன்னாபட்டியை சேர்ந்த அன்னக்கொடி என்பவருடைய வீடு இடிந்து விழுந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருமங்கலம்

திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் பொன்னமங்கலம். இந்த கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 2 நாட்களாக திருமங்கலம் பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் மழை பெய்த தொடங்கியது. திடீரென பலத்த மழை பெய்ததால் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி, பாண்டியம்மாள், மலையாண்டி, முத்துராமலிங்கம் ஆகியோர் குடியிருந்த வீடுகள் திடீரென இடிந்து விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. வீடு இடியும் முன்பு வீட்டில் உள்ளே இருந்த அனைவரும் வெளியேறி விட்டனர்.

அதனால் பெரிய உயிர் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இருப்பினும் திடீரென இடிந்து விழுந்ததால், வீட்டில் இருந்து வெளியேறும் போது மேலே இருந்த ஓடுகள் இவர்கள் மேல் விழுந்ததில், முத்துராமலிங்கம் பேத்தி பாண்டீஸ்வரி (வயது 12), மலையாண்டி, சீனியம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்கள் குடியிருக்கும் வீடு இடிந்து விட்டதால் அவர்களுக்கு நிவாரணம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மதுரையில் பெய்த மழை காரணமாக எல்லீஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது. கூடல் நகர் பகுதியில் மழைநீர் தேங்கியதால் சாலை சேரும் சகதியுமாக மாறியதல் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

வைகை ஆற்று தென்கரைப் பகுதியில் தளவாய் தெரு அருகே மரம் சாலையில் சாய்ந்து விழுந்தது.

மேலும் மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்திற்குள் மழை நீர் அதிக அளவில் தேங்கி நின்றது.


Next Story