பருவமழை தொடக்கம்: கண்களில் இமைப்படல அழற்சி நோயில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல்
நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை தொடங்கி உள்ளதால் கண்களில் இமைப்படல அழற்நி நோயில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பரவக்கூடியது
பருவமழை தொடங்கி உள்ள காரணத்தால் நாமக்கல் மாவட்டத்தில் கண்களில் கன்ஜக்டிவைடிஸ் எனப்படும் இமைப்படல அழற்சி நோய் ஏற்பட்டு வருகிறது. இந்த நோயானது கண்ணின் வெண்மைப்பகுதி மற்றும் கண் இமைகளின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய திசுக்களில் ஏற்படும் அழற்சியாகும். இது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் நோயாகும். மேலும் இது தொற்று நோயாக இருக்கும் காரணத்தால் மற்றவருக்கும் பரவக்கூடியது.
பாதிக்கப்பட்ட கண்ணின் வெள்ளைப்பகுதி இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறுதல், அதிகமான அளவில் கண்ணீர் சுரத்தல், கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு, அதிகப்படியான சளி வெளியேற்றம், கன்ஜங்டிவா மற்றும் இமையிணைப்படலம் மற்றும் கண் இமைகளில் உண்டாகும் வீக்கம், கண்களில் எரிச்சல், கண்ணில் தூசி அல்லது வேறு வெளிப்பெருள் உள்ளது போன்ற உணர்வு பார்வையில் ஏற்படும் இடையூறு, காலை விழித்தவுடன் கண் இமைகளில் ஏதோ பசை போன்ற பொருள் ஒட்டி இருத்தல் ஆகியவை கன்ஜக்டிவைடிஸ் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளாகும்.
இமை படல தடவல்
இந்த நிலை 4 வாரங்களுக்கு குறைவாகவே நீடிக்கும். ஒரு வேளை இந்த நோய்தொற்று நீடித்திருந்தாலோ அல்லது சிகிச்சைக்கு ஏற்ற பலன் கிடைக்காத போதோ ஒரு கண் இமைபடல தடவல் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படும்.
மேலும் கன்ஜக்டிவைடிஸ் சிகிச்சை அதன் காரணிகளை பொறுத்ததே ஆகும். பாக்டீரியா நோய் தொற்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நிறைந்த சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. வைரல் தொற்றுகள் வழக்கமாக அதன் போக்கிலேயே செயல்படும் குளிர்ந்த பொருள் கொண்டு ஒத்தடம் கொடுத்தல் மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது.
ஒவ்வாமையால் ஏற்படும் இமைப்படல அழற்சிக்கு தகுந்த கண்சொட்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. கன்ஜக்டிவைடிஸ் ஏற்பட்டிருக்கும் போது காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் பாதிக்கப்பட்ட கண்களை தொடக்கக்கூடாது. எனவே பொதுமக்கள் நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கன்ஜக்டிவைடிஸ் கண் நோயில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.