முதியோர்களிடம் உதவித்தொகை வாங்கி தருவதாக பணம் பறித்து வந்த போலி அதிகாரி கைது


முதியோர்களிடம் உதவித்தொகை வாங்கி தருவதாக பணம் பறித்து வந்த போலி அதிகாரி கைது
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வந்தவாசியில் முதியோர் உதவித் தொகை வாங்கித் தருவதாக கூறி மூதாட்டியிடமிருந்து 2 கிராம் தங்க நகை, ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவற்றை நூதன முறையில் அபேஸ செய்து விட்டு தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் போலீஸ் அதிகாரி என்று கூறி மது அருந்துபவர்களை மிரட்டியும், வயல்வெளிகளில் வேலை செய்யும் முதியவர்களிடம் வருவாய் அதிகாரி என முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறியும் பணம் பறித்து வந்த போலி அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காமராஜர் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி கோவிந்தம்மாள் (வயது 75). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு டிப்டாப் உடையணிந்த வாலிபர் மோட்டார்சைக்கிளில் வந்தார். அவர் கோவிந்தம்மாளிடம் நைசாக பேச்சுக்கொடுத்து முதியோர் உதவித் தொகை வாங்குகிறீர்களா என கேட்டுள்ளார்.

அதற்கு தனக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என கூறியுள்ளார். அப்போது அந்த மர்மநபர் கோவிந்தம்மாளிடம் நான் உங்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி தருகிறேன. அதற்கு ரூ.3 ஆயிரம் செலவாகும். நீங்கள் பணத்தை கொடுத்தால் நான் வாங்கி தருகிறேன் என நம்பிக்கை தரும் விதத்தில் கூறியுள்ளார்.

நகை, பணம் பறிப்பு

அதனை நம்பிய கோவிந்தம்மாள் ரூ.2 ஆயிரம் மட்டுமே உள்ளது என கூறினார். உடனே அந்த நபர், காதில் அணிந்த நகையை விற்றால் தேறிவிடும். ரூ.2 ஆயிரத்தை கொடுங்கள். மீதம் உள்ள ஆயிரம் ரூபாயை இந்த நகையை விற்று எடுத்துக்கொண்டு மீத பணத்தை உங்களிடம் தந்து விடுகிறேன் என கூறவே கோவிந்தம்மாள் தனது காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்க கம்மலை கழற்றி கொடுத்துள்ளார்.

மேலும் வீட்டினுள் சென்று ரூ.2 ஆயிரம் பணத்தையும் எடுத்து வந்து மர்ம நபரிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிய மர்மநபர் அங்கிருந்து சென்று விட்டார்.

நகை விற்ற பணத்தில் மீதமுள்ள பணத்தை அவர் தருவார் என காத்திருந்த கோவிந்தம்மாள் வெகுநேரம் ஆகியும் அந்தநபர் வராததால் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அவர்கள் உங்களிடம் நகை, பணத்தை அபேஸ் செய்து விட்டு அந்த நபர் சென்றிருப்பார் என சந்தேகத்துடன் கூறினர். அதன்பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டதை கோவிந்தம்மாள் உணர்ந்தார். இதுகுறித்து அவர் வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர்.

சிக்கினார்

இந்த நிலையில் வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராம கூட்டுச் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவரை வாகனத்தை நிறுத்துமாறு ைசகை செய்தனர்.ஆனால் அவர் அங்கு நிற்காமல் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் அவரை விரட்டி பிடித்து மடக்கினர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவாமூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முருகன் (வயது 45) என்று தெரியவந்தது.

போலீசார் முருகனை வந்தவாசி தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது முருகன் தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக் கொண்டு பல்வேறு இடங்களில் வயல்வெளியில் வேலை செய்யும் முதியோர்களை மட்டும் குறி வைத்து உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவது தெரியவந்தது. கோவிந்தம்மாளிடம் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி நகை, பணத்தை பறித்துக்கொண்டு தப்பியதை ஒப்புக்கொண்டார்.

மது அருந்துபவர்கள்

தொடர்ந்து நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. இவர் போலீஸ் அதிகாரி என்று கூறி மது அருந்துபவர்களிடம் பணத்தை பறித்து செல்வதும், வயல்வெளிகளில் வேலை செய்யும் முதியவர்களிடம் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பறித்து வந்துள்ளார்.மேலும் செஞ்சி பகுதியில் வழியில் சென்ற நபரிடம் 43 ஆயிரத்து 300 ரூபாயும் செய்யாறு பகுதியில் வயதான மூதாட்டியிடம் நகைகளை அடமானம் வைத்து பணம் தருகிறேன் என்று கூறி தங்க நகைகளை பறித்ததையும் இவர் ஒப்புக்கொண்டார்.

இவர் கொள்ளை அடித்த பணத்தை வைத்து பண்ருட்டியில் டிராவல்ஸ் நடத்தி வருவதும் 3 போலியான முகவரியில் அடையாள அட்டை இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இவர் மீது பல மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார்சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story