சென்னையில் சொத்து வரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!


சென்னையில் சொத்து வரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!
x

சென்னையில் 2-வது அரையாண்டுக்கான சொத்து வரியை நவம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்தினால் 2% தனி வட்டி கிடையாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, செலுத்தப்படும் சொத்து வரியில் 5% அல்லது அதிகப்பட்சமாக ரூ.5000/- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் 01.10.22 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. 01.10.2022 முதல் 18.10.2022 தேதி வரை 5.17 லட்சம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் சொத்து வரியினை செலுத்தியுள்ளனர்.

2வது அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள்ளாக சொத்து வரி செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு ரூ.4.67 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதி-29D-ன்படி, தாமதமாக சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும்.

ஆனால், சொத்து வரி பொது சீராய்வின்படி, உயர்த்தப்பட்ட சொத்து வரியினை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரி மதிப்பீட்டிற்குரிய உயர்த்தப்பட்ட சொத்து வரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்த 15.11.2022 வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story