கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
x

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உள்பட) பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் 2022-23-ம் ஆண்டிற்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி வருவாய் அடிப்படையிலான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடந்த 31-ந் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி படிப்பு, பேகம் ஹஜ்ரத் மஹால் கல்வி உதவித்தொகைக்கு வருகிற 15-ந் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகைக்கு வருகிற 30-ந் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story