திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலை திறக்க விதித்த தடை நீடிப்பு


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலை திறக்க விதித்த தடை நீடிப்பு
x

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலையை திறப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை வருகிற 6-ந்தேதிக்கு ஐகோர்ட்டு தள்ளிவைத்துள்ளது. சிலையை திறக்க விதித்த இடைக்கால தடை நீடிக்கிறது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில், நீர் போக்குவரத்து நிலத்தை ஆக்கிரமித்து, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கப்படுவதாக கூறி, அதற்கு தடை விதிக்க கோரப்பட்டுள்ளது. மேலும், வேங்கைக்கால் பகுதியில் ஜீவா கல்வி அறக்கட்டளை நிலம் வாங்கியுள்ளது. அந்த நிலத்துக்கு அருகே, நீர் போக்குவரத்து நிலத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை அமைக்கப்பட உள்ளது என்றும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டா நிலம்

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கிற்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், ஜீவா கல்வி அறக்கட்டளை நிர்வாகி பதில் அளிக்க உத்தரவிட்டது. சர்ச்சைக்குரிய நிலத்தில் கருணாநிதி சிலையை அமைக்க இடைக்கால தடையும் விதித்தது. அதைத்தொடர்ந்து, கலெக்டர், அறக்கட்டளை நிர்வாகி சார்பில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "சிலை அமைக்கப்பட உள்ள இடம் பட்டா நிலம், நீர் போக்குவரத்து நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கவில்லை. வேளச்சேரியை சேர்ந்த மனுதாரர், திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைக்கும் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தது யார் என்ற விவரங்களை மனுவில் குறிப்பிடவில்லை" என்று கூறியிருந்தனர்.

தள்ளிவைப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது சபீக் ஆகியோர் தீர்ப்பை தள்ளிவைத்து நேற்று முன்தினம் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு தீர்ப்புக்காக நேற்று பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியதுள்ளதால், உத்தரவு பிறப்பிக்கவில்லை. விசாரணையை வருகிற 6-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்" என்று நீதிபதிகள் கூறினர்.

அப்போது எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "கருணாநிதி சிலையை அவரது பிறந்த நாளான இன்று (வெள்ளிக்கிழமை) திறக்க உள்ளதால், ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும்" என்று முறையிட்டனர்.

தடை நீடிப்பு

அதற்கு நீதிபதிகள், "நாங்கள் இடைக்கால தடையை நீக்க மறுத்து உத்தரவு எதுவும் பிறக்கவில்லை. விரிவான விசாரணைக்காக வழக்கை 6-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். வேண்டுமானால் சிலை திறப்பு நிகழ்ச்சியை வேறு ஒரு தேதிக்கு தள்ளிவைக்கலாம்" என்று கருத்து தெரிவித்தனர்.

இதனால், கருணாநிதி சிலை அமைக்க ஏற்கனவே ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடை நீடிக்கிறது.


Next Story