மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தர்மபுரி,
தர்மபுரியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், மாவட்ட கலெக்டர் குடியிருப்பு, தர்மபுரி சிப்காட் அமைய உள்ள பகுதி மற்றும் தடங்கம் மேம்பாலம் ஆகிய பகுதிகளை இணைத்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் நடைப்பயிற்சிக்கான நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அதிகாலை 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார்.
தகவல்கள் தவறானவை
இதை தொடர்ந்து அரூர் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் தமிழ்நாடு மாநிலத்திலோ அல்லது தமிழ்நாட்டிற்கு வெளியிலோ இன்டர்ன்ஷிப் காலம் உள்பட எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். முடித்தவர்கள் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்வி நிறுவனங்களில் இருப்பிட சான்றிதழ்களுடன் முதுகலை மருத்துவ படிப்பு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள். இதற்கு மாறாக வந்த தகவல்கள் தவறானவை.
மேலும் பிற மாநிலங்களை பூர்வீகமாக கொண்டவர்கள் தமிழகத்தில் இன்டர்ன்ஷிப் காலம் உள்பட எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முடித்தவர்கள் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள திறந்தவெளி அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு மட்டுமே தகுதியானவர்கள்.
காலஅவகாசம்
தமிழ்நாட்டில் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள 20 ஆயிரம் மருத்துவ பணியிடங்களில் 1,021 பணியிடங்கள் மட்டுமே தற்போது காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட தேர்வை 25 ஆயிரம் பேர் எழுதினர். ஒரு மாதத்திற்குள் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை மருத்துவம் படிப்பதற்கு 39 ஆயிரத்து 924 மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். ஆனால் இதுவரை 32 ஆயிரத்து 649 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். மாணவர்கள் சான்றிதழ்கள் வாங்க கால தாமதம் ஏற்படுவதால், அவர்கள் விண்ணப்பிக்க 2 நாள் கால அவகாசம் கேட்டிருந்தனர். அதன்படி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 10-ந் தேதி என்பதை கூடுதலாக்கி நாளை மறுநாள் (12-ந் தேதி) வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய அரசும், மாநில அரசும் ஒரே தேதியில் கலந்தாய்வு நடத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த தேதியை அறிவிக்க இன்னும் 10 நாட்கள் ஆகலாம். ஆனால் அதுவரை காத்திருக்காமல் வருகிற 16-ந் தேதி காலை 10 மணிக்கு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான தகுதி பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.