பாமாயில் பிடித்த பொதுமக்கள் விரட்டியடிப்பு
உளுந்தூர்பேட்டையில் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் கொட்டிய பாமாயிலை பிடித்த பொதுமக்களை போலீசார் விரட்டியடித்தனர்.
உளுந்தூர்பேட்டை,
சென்னையிலிருந்து பாமாயில் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி டேங்கர் லாரி ஒன்று புறப்பட்டது. அந்த டேங்கர் லாரி உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியமாதேவி ஏரி அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் டேங்கர் லாரி பலத்த சேதமடைந்தது. இதனால் டேங்கரில் இருந்த பாமாயில் கீழே கொட்டி வீணாக ஓடியது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பாத்திரங்களில் பாமாயிலை போட்டி போட்டு பிடித்தனர். இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து பாமாயிலை பறித்ததோடு, அவர்களை விரட்டி அடித்தனர். இந்த விபத்தில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.